ஈ. சி. ஆர். சாலையின் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பு அருகில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
திடீரென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வருவாய்த்துறையினர் குடியிருப்புவாசிகள் அங்கிருந்து வெளியேற்றும்படி பெயர் பலகையை வைத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும், மேலக்கோட்டையூர் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்கள் வண்டலூர் - கேளம்பாக்கம் செல்லும் சாலையில், சாலையின் இருபுறமும் அமர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
உடனே, விரைந்து வந்த தாழம்பூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.