புதுக்கோட்டையில் ரமணா பட பாணியில் உயிரிழந்தவரின் உடலை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி பாக்கி கட்டணத்தை வசூலித்ததாக தனியார் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த 66 வயதான ஜீவானந்தம் என்பவர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கொத்தமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை லேசாக நெஞ்சு வலிப்பதாக குடும்பத்தாரிடத்தில் கூறியுள்ளார். முதலில் அரசு மருத்துவமனையிலும் பிறகு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜீவானந்தம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் சுமார் ரூ. 36 ஆயிரம் மதிப்பிலான ஊசி அவருக்கு போடப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். இதை தொடர்ந்து ஜீவானந்தம் நல்லபடியாக பேசிக் கொண்டிருந்துள்ளார். ஆனால், நேற்றிரவு ஜீவானந்தன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. ‘் உறவினர்களிடத்தில், ஜீவானந்தத்தின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவரை உயர் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் , டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் மருத்துவ கட்டணம் ரூ. 12 ஆயிரத்தை செலுத்துமாறு உறவினர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது. மீதித் தொகை ரூ.12 ஆயிரத்தை உறவினர்கள் செலுத்தியுள்ளனர். தொகையை செலுத்தியவுடன் ஜீவானந்தம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறியதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதை தொடர்ந்து ஜீவானந்தத்தின் உறவினர்கள் இன்று மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதய சிகிச்சை நிபுணரை கொண்டு ஜீவானத்தத்துக்கு சிகிச்சையளிக்காமல் பொது மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளித்ததால்தான் இறந்து போனதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவமனை தரப்பில் கூறுகையில், ''இதய சிகிச்சை நிபுணர்களிடத்தில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆலோசனைகள் கேட்டுதான் சிகிச்சையளித்தோம். கார்டியோலாஜிஸ்ட் சிகிச்சை அளிக்காததால் ஜீவானந்தம் இறந்தார் என்று சொல்வது தவறானது''என்கின்றனர்.