அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சுரப்பா மீதான புகார் தொடர்பாக விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இது போல புகார் எழுந்த அனைத்து துணைவேந்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு எத்தனை துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக பிரச்சனைகள் குறித்து பல முறை, பல தரப்பிலும் புகார் எழுந்த நிலையில், இதுவரை விசாரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அதில் முகாந்திரம் உள்ளதா? என பார்க்காமல், விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன்? சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என கேள்விகளை அடுக்கினர்.
இது போல புகார் எழுந்த அனைத்து துணைவேந்தர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்த அரசாணை உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.