எடப்பாடி அருகே ஆன்லைனில் பணத்தை இழந்ததால், மனைவியின் தங்க நகையை போலியாக செய்து வைத்த கணவர் வீட்டில் மனைவி தர்ணாவில் ஈடுபட்டு வருகறிர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகேயுள்ள நத்தகாட்டூரைச் சேர்ந்த தமிழ்செல்வியும் கண்ணந்தேரியை சேர்ந்த மணிகண்டனும் கடந்த 2014ஆம் ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். கால ஓட்டத்தில் தமிழ்ச்செல்வியின் பெற்றோர்கள் சமாதானம் அடைந்துள்ளனர். பிறகு, மகள் தமிழ் செல்விக்கு 30 சவரன் நகையை வரதட்சனையாக கொடுத்துள்ளனர். இதற்கிடையே, மணிகண்டனுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் வழக்கம் இருந்துள்ளது. இதில், ஏராளமான பணத்தை இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன் மனைவியின் 30 சவரன் நகைகளையும் விற்று ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார்.
பிறகு, தன் மனைவியின் நகைகளை போலவே போலி நகைகளை செய்து வைத்துள்ளார். உண்மை தெரிந்து தமிழ் செல்வி மணி கண்டனிடத்தில் சண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் தமிழ் செல்வி புகாரளித்துள்ளார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இது தொடர்பாக , தமிழ் செல்வி கொங்கணாபுரம் போலீஸில் புகார் அளித்ததையடுத்து , 6 மாதத்துக்குள் நகைகளை திருப்பி கொடுத்து விடுவதாக மணிகண்டன் எழுதி கொடுத்துள்ளார். ஆனால், தற்போது வரை நகைகளை திருப்பி தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, கண்ணந்தேரியிலுள்ள மணிகண்டனின் வீட்டு முன்பு தமிழ் செல்வி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.