மதுரை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, காவல்நிலையத்தில் மயங்கிவிழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையாவின் மகன் அய்யனார் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மது அருந்தும் பழக்கம் அய்யனாருக்கு இருந்துள்ளது. விடுமுறையான நேற்று நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, ஸ்நாக்ஸ் தீர்ந்துவிடவே மது பாட்டிலை நண்பர்களிடம் கொடுத்து விட்டு ஸ்நாக்ஸ் வாங்க கடைக்குச் சென்றார் அய்யனார். ஸ்நாக்ஸ் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தபோது நண்பர்கள் மதுவை காலி செய்து விட்டனர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட டி.கல்லுப்பட்டி காவல்நிலைய போலீசார், தகராறு செய்த அய்யனாரை விசாரிப்பதற்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அய்யனாரின் உறவினர்களும் உடனடியாகக் காவல்நிலையம் சென்றனர். அய்யனார் அதிக போதையில் இருந்ததால் அவரை அழைத்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் அய்யனாரை அழைத்து செல்லும் போது காவல்நிலைய வாசலில் மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவர்கள் அய்யனாரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே அய்யனார் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யனாரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதை வாலிபர் , காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.