வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடலின் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அதன்பின் மேலும் வலுவடைந்து வடமேற்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 2ந் தேதி தென்தமிழகக் கடற்கரையை அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், பிற கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் டிசம்பர் 2 வரை மீனவர்கள் இந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.