கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் வாழைகள், கரும்புகள் சாய்ந்துசேதமடைந்துள்ளன. மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் அழுகிப் போகும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அப்போது கடலூர் மாவட்டப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன், கனமழையும் பெய்தது.
இதனால் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் பல்வேறு ஊர்களில் முந்நூறு ஏக்கர் பரப்பில் பயிரிட்டிருந்த பன்னீர்க் கரும்புகள் மழையில் நனைந்து சூறைக்காற்றில் வேருடன் சாய்ந்தன.
அறுவடைக்கு இன்னும் ஒன்றரை மாதமே இருந்த நிலையில் கரும்புகள் சாய்ந்ததால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே ராமாபுரம், புலவனூர் உள்ளிட்ட ஊர்களில் பயிரிட்டிருந்த வாழைகள் புயலின் வேகத்தைத் தாங்க முடியாமல் முறிந்தும் சாய்ந்தும் விழுந்து சேதமடைந்துள்ளன.
குலைதள்ளும் பருவத்தில் வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சம்பா பருவத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கடந்த 4 நாட்களாகத் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நீர் வடியாத பகுதிகளில் நெல் நாற்றுகள் அழுகிப் போகும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.