வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. கன்சால்பேட்டை, திடீர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் உள்ள வீரந்தாங்கல், ஸ்ரீபாதநல்லூர், வெப்பலை, கனகதாங்கல், தேன்பள்ளி உள்ளிட்ட15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. ஜவ்வாது மலையில் பொழிந்த கன மழையினால், அடிவாரமான அமிர்தி வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் உருவாகி, அது நாகநதி ஆற்றில் கலந்து ஆக்ரோஷமாக ஓடியது.
குடியாத்தம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தாழையாத்தம் பகுதியில் வீட்டின் மீது மரம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும்பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட கே.கே.நகர் குடியிருப்பு பகுதி மழை நீரால் சூழப்பட்டு, பலரின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
திமிரி அடுத்த மோசூர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 10,000த்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்தன.
அரக்கோணம் மற்றும் தாழ்வான பகுதிகளான டி.என்.நகர், குறிஞ்சி நகர், அம்பேத்கர் நகர், லட்சுமி நகர், தோல் ஷாப், நேருஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வீடுகளில் புகும் அபாயநிலை ஏற்பட்டது.
ஆற்காடு - கலவை சாலையில் நிவர் புயல் காரணமாக புளியமரம் சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. மழை பாதுகாப்பு காரணமாக 14 முகாம்களில் 368 பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆம்பூர் அருகில் உள்ள சான்றோர் குப்பம் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததில் இங்குள்ள பள்ளியின் பக்கவாட்டு சுவர் மற்றும், 5க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது.
ஆம்பர் சாய்பாபா கோயில் அருகே உள்ள ஆலங்குப்பம் ஏரி உடைப்பு ஏற்பட்டுள்ளது இதனால் சாய்பாபா கோயில் பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் புகுந்தது.