சென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்றிரவு பதினொன்றரை முதல் இன்று அதிகாலை இரண்டரை மணி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்று வீசியதுடன் மிகக் கனமழையும் பெய்தது.
புயலின் தாக்கத்தால் இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாகத் தாம்பரத்தில் 31 சென்டிமீட்டரும், புதுச்சேரியில் 30 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இன்று காலை எட்டரை மணி நிலவரப்படி நிவர் புயல் புதுச்சேரிக்கு வடமேற்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.
வடமேற்குத் திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிலப் பகுதிக்குள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் வடதமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யவும், ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே வரும் 29ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.