வங்கக்கடலில் மையம் கொண்டு அதி தீவிர புயலாக உருப்பெற்று சென்னைக்கும் கடலூருக்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கப்போகும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு ஈரான். இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு நிஷாக்ரா என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த கதி (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்துரை செய்த நாடு இந்தியா.
இப்படி பெயரிடும் வழக்கம் 2004- ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது. உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் மையம் திகழ்கிறது.
ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ், அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்த 13 நாடுகள்தான் வைக்கின்றன.
இந்த புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது, ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணவும், மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளை துரிதமாக வழங்குவதை நோக்கமாகவும் கொண்டது.சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் மற்றும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.
தற்போதைய புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த நிவர் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இரானிய மொழியில் நிவர் என்றால் வெளிச்சம் என்று அர்த்தம். சுழற்சி முறையில் வரும் இந்த பெயர்களில் தமிழ் பெயரான முரசு இடம் பெற்றிருக்கிறது. இது தமிழத்தில் வழக்கத்தில் உள்ள இசைக்கருவியின் பெயர். இதேபோல, நீர் என்ற தமிழ் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.