திருவண்ணாமலை அருகே பன்றி கொட்டகைக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் காஞ்சி கிராமம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அண்ணாமலை (65) என்பவர் பன்றிகளை வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவரின் மகன் சங்கர் தன் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளார். சங்கரின் வயலுக்குள் புகுந்த அண்ணாமலையின் பன்றிகள் நிலக்கடலை செடிகளை நாசம் செய்துள்ளன.
இதனால், ஆத்திரமடைந்த சங்கர், அண்ணாமலையின் பன்றி கொட்டகையை தீயிட்டு கொளுத்தி உள்ளார்.இதில், 2 பன்றிகள் தீயில் கருகி இறந்து போயின. மேலும் கொட்டகைக்கு அருகில் இருந்த அண்ணாமலையின் குடிசை வீடும் தீப்பற்றி எரிந்தது. வீட்டிலிருந்த ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 சவரன் நகைகள் தீயில் கருகி விட்டன.
இது தொடர்பாக அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.