சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிக பெரியது. 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. ஏரி வெட்டப்பட்ட போது, நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர், தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது.
ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 ஆயிரம் அடி நீளத்தில் தானாகவே உபரிநீர் வெளியேறும் கலங்கல் ஆகியவற்றைக் கொண்டது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் விநாடிக்கு 50,000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உண்டு. அடையாறு ஆற்றுக்கு நீர் வந்து சேரும் பல நீர்நிலைகளின் மொத்த பரப்பளவு 808 சதுர கி.மீ ஆகும். இவற்றில், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு மட்டும் 358 சதுர கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு ஆண்டு தோறும் குடி நீர் தந்து உதவும் செம்பரம்பாக்கம் ஏரி நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மக்களை மிரட்டத் தொடங்கி விடும். கடந்த 2015 - ம் ஆண்டு சென்னையில் கனமழை கொட்டியதால், பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடுவதில் குழப்பமும் கால தாமதமும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென்று, 30,000 கன அடி நீர் வீதம் அடையாற்றில் திறந்து விடப்பட்டதால், சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது, செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் இன்று திறந்து விடப்படவுள்ளது. விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்படவுள்ளது. இந்த முறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்றிரவு ஏரியை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி அடையாறு, கூவம் நதி கரையோரப்பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருநீர்மலை, குன்றத்தூர், சிறுகளத்தூர், கெழுத்திப்பேட்டை, அனகாபுத்தூர், முடிச்சூர், மற்றும் அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.