நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி ஆய்வு செய்தார். தொடர்ந்து பேசிய அவர், புயல் பாதுகாப்பு மையங்களில் மற்றும் இதர தங்கும் மையங்களில் 164 ஜெனரேட்டர்கள் தயார் நிலையிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் இது தவிர தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை தந்துள்ளனர் இவர்கள் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று குழுக்கள் கடலூர் பகுதியிலும் மற்ற மூன்று குழுக்கள் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் பகுதிகளில் முகாமிட்டுள்ளதாகவும் சந்திரசேகர சகாமூரி தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்வதால், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்தப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருவாய்த்துறை தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் பாதிப்புகளை எதிர்கொண்டு உதவ, அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மின்கம்பங்கள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்யவும், மரங்களில் உள்ள கிளைகளை வெட்டவும் உத்தரவிட்டார்.
மேலும், தடையில்லாமல் குடிநீர் வழங்கவும், மின்சாரம் தடைப்பட்டால் 12 மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புதுச்சேரி முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்திருக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.