வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறிப் புதன் நண்பகல் வாக்கில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும், இதனால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும், அதையடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன் நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகத் தீபகற்பப் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புகள் நாளை முதல் அதிகரிக்கும் என்றும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் செவ்வாய் முதல் வியாழன் வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 25ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.