தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 7ஆம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும் தெய்வானைக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் நடைபெற்றது. பக்தர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் தெய்வானை திருமண வைபோகம் உட்பிரகாரத்தில் எளிமையாக நடைபெற்றது.
தூத்துக்குடி சிவன்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கோவில் வளாக மண்டபத்தில் நடைபெற்றது.
கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்மாள் கோயிலில் உள்ள புற்றுக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கும், வள்ளி-தெய்வானை அம்மாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சென்னை காசிமேட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆகம விதிப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது.