ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
வழக்கின் முந்தைய விசாரணையில், மத்திய, மாநில அரசுகள் உட்பட கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர்கள் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்காக விளம்பரம் செய்யும் பிரபலங்களை பல லட்சக்கணக்கானவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆகவே அவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.