நிதி நெருக்கடியில் சிக்கிய லஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெபாசிட்தாரர்களுக்கு திருப்பி அளிக்க தேவையான பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி நியமித்த சிறப்பு நிர்வாகி மனோகரன் தெரிவித்துள்ளார்.
கரூரில் 1926 ஆம் ஆண்டு ராமலிங்க செட்டியார் தலைமையில் 7 வர்த்தகர்கள் இணைந்து தொடங்கியதே லஷ்மி விலாஸ் வங்கி. அந்த பகுதியில் வசித்த விவசாயிகள், தொழில்துறையினரின் நிதி தேவைக்காக வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக வளர்ச்சி கண்டு தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வந்தது. 94 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட வங்கியில், 2016 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதிக தொகைக்கு கடன் கொடுப்பதில் கவனத்தை செலுத்தியதால் சறுக்கல் தொடங்கியது.
குறிப்பாக மால்விந்தர்சிங், ஷிவிந்தர்சிங்கின் சகோதரர்களின் ரெலிகேர் நிறுவனத்திற்கு அளித்த 720 கோடி ரூபாய் வாராக்கடனாக மாறியது. அதனைத் தொடர்ந்து வாராக் கடன் அதிகரித்ததால், நிதி நெருக்கடி முற்றியது. கடந்த 3 நிதி ஆண்டுகளாக லாபம் ஈட்டாமல் நட்டத்தை சந்தித்ததால் மூலதனம் இன்றி முடங்கும் நிலை உருவானது.
இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி நிர்வாகத்தை கையில் எடுத்து, தற்காலிகமாக செயல்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 16 ஆம் தேதி வரை அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் அவசர தேவைக்காக லஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி கன்டோன்மென்ட் லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பலர் தங்களது கணக்கை முடித்து பணத்தை திரும்ப பெறுவதற்காக பதற்றத்துடன் குவிந்தனர். காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து ஒவ்வொருத்தராக வங்கி உள்ளே செல்ல அனுமதித்தனர்.
கனரா வங்கியின் முன்னாள் பொறுப்பு தலைவர் மனோகரன் என்பவரை, லஷ்மி விலாஸ் வங்கியின் சிறப்பு நிர்வாகியாக ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது. மேலும் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக 2500 கோடி ரூபாயை மூலதனமாக டிபிஎஸ் வங்கி அளிக்க இருக்கிறது.
வங்கியில் டெபாசிட்தாரர்களின் பணம் 20 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ள மனோகரன், வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்பதால் பதற்றம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். வங்கியின் 4 ஆயிரத்து 100 ஊழியர்களும் பணியில் நீடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை எதிரொலியாக லஷ்மி விலாஸ் வங்கியின் பங்கு விலை ஒரே நாளில் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 12 ரூபாய் 45 காசுகளாக குறைந்தது.