இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசுப் பள்ளியில் படித்து கலந்தாய்வில் பங்கேற்போருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குகிறார்.
நீட் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக 38 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். நேற்று முன்தினம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி, 300-க்கும் அதிகமானோர் பயன்பெற உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கலந்தாய்வில், தினமும் 3 கட்டங்களாக தலா 175 மாணவர்கள், கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, போக்குவரத்து வசதி, தங்கும் இடம் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
கலந்தாய்வுக்குப் பின் மருத்துவப் படிப்பில் சேரவிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குகிறார்.
இதனிடையே, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.