தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியுள்ளது.
முருகபெருமானின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கந்த சஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவினையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டிவிட்டு 7 நாட்களும் கோவிலில் தங்கியிருந்து விரதம் இருப்பதும், பின்னர் விழா நிறைவு நாளில் காப்பை கழற்றிவிட்டு வீடுகளுக்குச் செல்வதும் வழக்கமாகும். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயிலில் காப்பு கட்டவும், தங்கி விரதம் இருக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முருகனின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அதன் பின்பு 7 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் 20, 21ஆம் தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கடற்கரைக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால், கோவிலிலிருந்து இறங்கும் பகுதியில் தகரத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
முருகனின் 5ம் படை வீடான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலிலும் கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீகோட்ட ஆறுமுக சுவாமி கோவிலிலும் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
முருகனின் 4ம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலிலும் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இன்றி கோயில் பணியாளர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மிகவும் பழைமையான அக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா அச்சுறுத்தலால் கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கபடவில்லை. இதனால் நுழைவாயில் அருகே நின்று அவர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் கொடியேற்றம் முடிந்தபிறகு கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.