திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வீட்டில் சமையலின்போது எரிவாயு உருளை தீப்பற்றி வெடித்ததில் தீக்காயம் அடைந்தும், இடிபாடுகளில் சிக்கியும் மூவர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரணி புதுக்காமூர் தெருவில் உள்ள சந்திரா என்பவர் வீட்டில் சமையலின்போது எரிவாயு உருளை தீப்பற்றி வெடித்தது. இதனால் சந்திரா வீடும், அருகில் உள்ள முத்தாபாய் வீடும் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய சந்திரா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த காமாட்சியும் ஒரு குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.
முத்தாபாய், மீனா, ஜானகிராமன் உட்பட 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எரிவாயு உருளை தீப்பற்றிய விபத்தில் மூவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.