இன்று வருடத்தின் பெரும்பாலான நாள்கள் வறண்டும், மழை காலங்களில ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக்கும் பாலாறு, ஒரு காலத்தில் ஆக்ரோஷமான நதியாக இருந்துள்ளதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. கடந்த 1903 ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாணியம்பாடி நகரமே சின்னாபின்னமாகிப் போனதாக அமெரிக்காவிலிருந்து வெளியான 'தி கால்' என்ற பத்திரிகை செய்தியாக வெளியிட்ட வரலாறும் பலரும் அறியாத விஷயமாகும்.
கடந்த 1903ஆம் ஆண்டு மைசூர், கோலார் பகுதிகளில் தொடர்ந்து 15 நாட்கள் விடாமல் கனமழை பெய்தது. இதனால், பாலாற்றில் வெள்ளம் பெருக்கெத்து ஓட , ஆற்றை ஒட்டியுள்ள பெரிய ஏரிகளான கோலார் ஏரி, ஒலையல் ஏரி, தற்போது அணையாக மாற்றப்பட்டுள்ள பேத்தமங்கலம் ஏரி, ராம சாகர் ஏரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏரிகள் நிரம்பின. நவம்பர் மாதம் 11ஆம் தேதி இரவில் பாலாற்றை ஒட்டியிருந்த வாணியம்பாடி நகரமே வெள்ளத்தால் சூழபப்பட்டு தனி தீவாக மாறியது. வாணியம்பாடி நகரத்துக்குள் வெள்ளம் 5 அடி உயரத்துக்கு ஓடத் தொடங்க 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தும் போனார்கள். இரண்டு நாள்களில் பாலாற்று வெள்ளத்தில் வாணியம்பாடி நகரம் சின்னாப்பின்னமானது.
வாணியம்பாடியில் பாலாற்று வெள்ளத்துக்கு மக்கள் பலியான சம்பவம் குறித்து 1903 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து வெளியாகும் 'தி கால்' என்ற பத்திரிகையும் செய்தியாக வெளியிட்டுள்ளது. வெள்ளத்தில் பலியானவர்களை நினைவு கூறும் விதத்தில்தான் வாணியம்பாடி கஞ்சரி சாலையில் நினைவு தூண் எழுப்பப்பட்டுள்ளது.
பாலாற்று வெள்ளத்தில் 200 பேர் பலியாகி 117ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் பலியானவர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள், பாலாற்றில் வெள்ளம் ஏற்படாது என்று கருதி ஆற்றை குப்பை மேடாக்கி நீரோட்டத்தை தடுக்கின்றனர். ஆற்றை மாசுப்படுத்துவதும் நீரோட்டத்தின் போக்கை தடுக்கும் வகையிலும் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லையென்றால், சாது மிரண்டால், காடு கொள்ளாது என்கிற ரீதியில் மற்றோரு வெள்ளத்தை வாணியம்பாடி நகரம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.