காவல் நிலையங்களுக்கு வரும் மக்களை முறையாக நடத்தாத போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான் குளம் தந்தை, மகன் மரண வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், சிபிஐ மற்றும் எதிர் தரப்பு ஆட்சேபனை தெரிவித்தால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், காவல் மரணங்கள் மனிதத்தன்மையற்றவை மட்டுமின்றி ஜனநாயகத்திற்கு எதிரானவை என்று கூறிய நீதிபதிகள், காவல் மரணங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியவை என தெரிவித்தனர்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக காவல் மரணங்கள் நிகழ்வது போல தெரிகிறது என்றும், காவல்நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களின் உரிமைகள் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என்றும் சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.