ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ள நிலையில், டி20 அணியில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேப்டன் கோலி ஜனவரியில் தந்தையாக உள்ளதால், முதல் டெஸ்ட் போட்டியுடன் தாயகம் திரும்புகிறார். இதனால், காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா, டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, உடல்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்ற பின்னர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் எனவும், காயம் காரணமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக நடராஜன் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் தேர்வாகியுள்ள சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட் செய்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.