என் கண்களுக்கு ராமு தான் உண்மையான ஹீரோவாக தெரிகிறார் என்று ஒரு துப்புரவு தொழிலாளி குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகை கனிகா பதிவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளியாக ராமு என்பவர் பணி புரிந்து வருகிறார். நடிகை கனிகா வீடு இருக்கும் பகுதியில் கடந்த 2 ஆண்டு காலமாக இவர்தான் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதுவரை, அந்த பகுதியில் ராமுவை யாரும் கண்டு கொண்டதில்லை. அவரும் தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், இன்று காலை நடிகை கனிகா அவருக்கு வணக்கம் கூறியிருக்கிறார். என்னவோ தெரியவில்லை, ராமுவின் கண்களில் நீர் திரண்டு மளமள வென கொட்டியுள்ளது. ' அம்மா எனக்கு யாரும் இதுவரை வணக்கம் சொன்னதில்லை. நீங்கள் எனக்கு வணக்கம் சொன்னதை நம்ப முடியவில்லை. என்னை சக மனிதனாக மதித்தற்கு நன்றி' என்று கனிகாவிடத்தில் உருகியே போய் விட்டார்.
மேலும், 'எனக்கு உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை. ஆனால், உங்களிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தது' என்றும் அப்பாவியாக கேட்டுள்ளார். இதை கேட்ட, நடிகை கனிகா உடனடியாக , 'போட்டோ என்ன செல்பியே எடுத்துக் கொள்ளுங்கள் ' என்றவாரே செல்பியும் எடுத்துள்ளார். தற்போது, அந்த செல்பியை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கனிகா... ராமுதான் உண்மையான ஹீரோ என்றும் கூறியுள்ளார். பின்குறிப்பில், நாங்கள் இருவருமே மாஸ்க் அணிந்திருந்தோம். செல்பிக்காக கழற்றி விட்டோம் என்றும் கனிகா தன் பதிவில் கூறியுள்ளார்.
நடிகை கனிகாவின் செயலுக்கு நெட்டிஸன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.