ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 கூலி தொழிலாளர்கள் பலியாகினர்.
தம்புரெட்டி மலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்கு வாடகை டாட்டா சுமோ காரில் காலை 7 மணியளவில் சென்றனர்.
மலைசாலையில் உள்ள இறக்கத்தில் கார் இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடி, சாலையோரமுள்ள மண் பகுதியில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தேவராஜ் , சிக்கணன் , தொட்டப்பி , ஜோகன் ஆகிய 4 பேர் பலியானதோடு, 11 பேர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் திடீரென காரில் ஏற்பட்ட பழுதும், காரில் அதிக அளவில் ஆட்கள் ஏற்றிச் சென்றதுமே விபத்துக்கு காரணமென தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.