சேலத்தில் நிலம் தொடர்பான பிரச்சனையில் நியாயம் கேட்க வந்த ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏவை. விவசாயி ஒருவர் கேள்விகளால் தெறிக்கவிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தனித்தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் சின்னதம்பி. அதிமுகவை சேர்ந்த சின்னத்தம்பியின் சொந்த ஊரான ராமநாயக்கன் பாளையத்தில் இவரது நிலத்தையொட்டிய வயல்காட்டு பகுதிக்கு வேலிமைப்பதற்காக பக்கத்து நிலத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் வழியையும் சேர்த்து கல் நட்டுக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து வந்த எம்.எல்.ஏ சின்னதம்பி வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆபாசமாக பேசி சத்தம் போட்டு யாரை கேட்டு வேலி அமைத்தாய் என்று உரக்க குரல் கொடுத்தார். இதனை ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுப்பதை கண்டதும் கடப்பாரை எடுத்துட்டு வார்ரேன் அப்போ எடு என்றார் எம்.எல்.ஏ சின்னத்தம்பி.
அடுத்த நொடியே ஒரு எம்.எல்.ஏ என்றும் பாராமல், தனது சொந்த நிலத்தில் வேலி அமைக்கிறேன் உனக்கு என்ன ?, உன்னால என்ன செய்யமுடியுமா செய் ? .. என்று கெத்தாக எதிர் சவால் விட்டார் அந்த விவசாயி..!
ஒருவரது பெயரை சொல்லி அவரை தெரியுமா என்று கேள்வி எழுப்பினார் எம்.எல்.ஏ சின்னத்தம்பி, இதனால் ஆவேசமான விவசாயியோ , நல்ல டவுசர் கூட போடாதவன் நீ என்று ஆரம்பகால வாழ்க்கையை கிளறியதோடு, கட்டப்பொம்மன் திரைபட பாணியில் இந்த காடு வாங்கியது உனக்கு தெரியுமா ? ரோடு போட்டது தெரியுமா ? என்று அடுக்கடுக்கான கேள்விகளால் தெறிக்கவிட்டார்.
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த எம்.எல்.ஏ சின்னதம்பி, இன்னும் கொஞ்ச நேரத்தில் காருல அய்யா வருவாங்க, அவங்ககிட்ட பதில் சொல்லு என்று கூற, அதற்கு அந்த விவசாயி எந்த ஒரு அச்சமும் இன்றி அங்கேயே நின்றார் , இதனால் திட்டியபடியே எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று விட்டார் எம்.எல்.ஏ சின்னத்தம்பி.
இந்த பரபரப்பான வாக்குவாத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்ற நிலையில் இது தொடர்பான புகார் குறித்து போலீசார் விவசாயியை அழைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் நிலப்பிரச்சனை என்றால் முறைப்படி நில அளவீட்டாளரை வரவழைத்து அளவிட்டு உறுதி செய்து கொள்வதை விடுத்து வீதியில் நின்று சத்தம்போடுவது எம்.எல்.ஏ பதவிக்கு சரியாக இருக்குமா என்பதே இச்சம்பவத்தை பார்க்கும் மக்களின் கேள்வியாக உள்ளது.