பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததைக் கண்டித்து அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரை இறங்க செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
ஓசூரில் பாஜகவினர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் அனைவரையும் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை 100 அடிக்கு முன்பே தடுத்து நிறுத்த போலீசார் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புள்ள சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.