நீலகிரி மாவட்டத்தில் 189 கோடி ரூபாயில் முடிவுற்ற 67 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 131 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்ட்கோசர்வ் நிறுவனத்தின் சார்பில் 6 புதிய தேயிலை வகைகளையும் அவர் அறிமுகம் செய்தார்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாகக் குறைந்து வருவதாக அப்போது முதலமைச்சர் கூறினார்.
முன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் 189 கோடி ரூபாயில் முடிவுற்ற 67 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இதேபோல, பல்வேறு துறைகளின் சார்பில் 131 கோடி ரூபாயில் 123 புதிய திட்ட பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவுக் கூட்டமைப்பான இன்ட்கோசர்வ் சார்பில் 6 புதிய தேயிலை வகைகளையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.