வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலும், விருதுநகர், தூத்துக்குடி, தேனி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் இருதினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவில் மிதமான மழை பெய்தது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் மழையுடன் பலத்த காற்று வீசியதில் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை கொட்டிதீர்த்தது.
இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.