சென்னையில் சொத்துக்காக தங்கையின் குடும்பத்தையே விஷம் வைத்து கொலை செய்த சகோதரிகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு, கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம்- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு வாரிசுகள் இல்லை.இந்த தம்பதிக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. கடைகளை வாடக்கும் விட்டதிலும் வாடகை பணமும் வந்து கொண்டிருந்தது. தம்பதிக்கு வாரிசுகள் இல்லாததால், சொத்துகளை உறவினர்கள் கைப்பற்ற திட்டமிட்டனர். இதனால், மதுவில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கலந்து தர்மலிங்கத்துக்கு கொடுத்தனர். மீனாட்சிக்கு உணவில் விஷம் வைத்துள்ளனர். உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடுத்தடுத்து தர்மலிங்கமும் மீனாட்சியும் இறந்தனர். மீனாட்சியின் சகோதரி லதா இது குறித்து போலீஸில் புகாரளித்திருந்தார். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் கிடப்பில் போட்டனர்.
லதா
இந்த கொலைகள் தொடர்பாக, மயிலாப்பூர் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி, சிபிசிஐடி போலீசார் நடத்த வேண்டும் என்று தர்மலிங்கத்தின் சகோதரர் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, 2018-ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும், விசாரணை தீவிரமாகவில்லை. இதையடுத்து, கடந்த மார்ச் மாதத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் குமார் புகார் அளித்தார். கொலைகளுக்கு லதாவும் உடந்தை என்றும் அதற்கான ஆதாரத்தையும் இணைத்திருந்தார். முதல்வர் தனிப்பிரிவு மற்றும் உள்துறை செயலர் அலுவலகத்தில் இருந்த புகார் மனு குறித்து விசாரணை இறுகியதும், சிபிசிஐடி போலீஸார் பம்பரமாக சுழன்றனர்.
தர்மலிங்கம், மீனாட்சி தம்பதியின் உறவினர்களை தீவிரமாக விசாரித்தனர். அப்போதுதான், சொத்துக்கு ஆசைப்பட்டு மீனாட்சியின் அக்காள் லதா, தங்கை மைதிலி மற்றும் அவரின் நண்பர் பாலமுருகன் ஆகியோர் தர்மலிங்கம் தம்பதியை விஷம் கொடுத்து கொன்றது தெரிய வந்தது. மைதிலியும், பாலமுருகனும் மீனாட்சி நடத்தி வந்த பூக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை, மீனாட்சியும் தர்மலிங்கமும் கண்டித்துள்ளனர். இதனால், கோபமடைந்த மைதிலி மற்றும் பாலமுருகன் ஆகியோர் லதாவின் யோசனையின் பேரில் தர்மலிங்கம் , மீனாட்சிக்கு விஷம் கொடுத்துள்ளனர்.
பாலமுருகன் மற்றும் மைதிலி
மருத்துவமனையின் தர்மலிங்கம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது சொத்துகளை லதா தன் பெயருக்கும் மாற்றிக் கொண்டுள்ளனர், விசாரணையில் உண்மை அம்பலமாக கொலை நடந்து 3 ஆண்டுகளுக்குகுப் பிறகு லதா நேற்று கைது செய்யப்பட்டார். தர்மலிங்கத்தின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.11 லட்சம் பணம் லதாவின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதும் மீனாட்சியின் பெயரில் இருந்த ரூ. 40 லட்சம் மதிப்புடைய வீடும் லதாவின் பெயருக்கு மாற்றப்பட்டதும் தெரிய வந்தது.