தமிழகத்தில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2018-ல் வெளியிடப்பட்ட பழைய தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் 28-ம் தேதி 561 பேரின் திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப் பட்டிருந்தது. இதில் பழைய தேர்ச்சி பட்டியலில் இருந்த 45 பேர் நீக்கப்பட்டு, புதிதாக 85 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
மேலும் புதிய பட்டியலில் உள்ளவர்களில் 18 பேருக்கு தலா 5 மதிப் பெண்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பழைய பட்டியலில் வேலைவாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை மதிப்பெண்கள் பூஜ்ஜியம் என இடம்பெற்றிருந்தது.
உடற்கல்வி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவதற்கான, பணி நியமன கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழலில், முறைகேடு நடந்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.