தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின்கூட்ட நெரிசலை சமாளிக்க, சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 757 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்புகளை, சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் M.R. விஜயபாஸ்கர், வெளியிட்டார். வருகிற 11 ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 510 பேருந்துகளுடன் மொத்தம் 14 ஆயிரத்து 757 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
இதேபோல தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பும் வகையில்,15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, 8 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 16 ஆயிரத்திற் கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு, பொதுமக்களை, M.R. விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மாதவரம், கே.கே. நகர், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையங்களுக்கு எளிதாக செல்லும் வகையில், மாநகர பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும். www.tnstc.in, tnstc official app, https://www.redbus.in/, https://paytm.com/, https://busindia.com/ உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிக்க 94450 14450 மற்றும் 94450 14436 என இரு செல்போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பொது மக்கள், தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 20 தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.