மயிலாடுதுறை மாவட்ட மீனவ மக்களின் நாட்டாமை கிராமமாக தரங்கம்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நாட்டாமை மீனவ கிராமத்தை தேர்ந்தெடுக்க மீனவ மக்கள், மீனவ கிராமங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினர். தரங்கம்பாடியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வௌளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர;குப்பம், மடத்துக்குப்பம், கீழமூவரக்கரை, மேலமூவரக்கரை, தொடுவாய், சின்ன கொட்டாய்மேடு, பழையாறு, கொடியம்பாளையம், சாவடிகுப்பம் உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு தரங்கம்பாடி மீனவ கிராமத்தை நாட்டாமை கிராமமாக ஏற்றுக்கொள்ளள முடிவு செய்யப்பட்டுள்ளது. பதவி ஏற்பு மற்றும் பரிவட்டம் கட்டும் விழாவுக்கு நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவகிராம பஞ்சாயத்தார்கள்கள், நாகை மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஆகியோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சியை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரு மீனவ கிராமங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டால், அதை தீர்த்து வைப்பது, மீனவ கிராமங்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்த்து வைப்பது. மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துவது போன்றவை நாட்டாமை கிராமத்தின் முக்கிய பணிகள் ஆகும். மாநில அளவில் நடைபெறும் மீனவ கிராமங்களின் கூட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் இனிமேல் பங்கேற்பார்கள்.