சென்னை அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கேசவதன்ராஜ் ( வயது 21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கேசவதன்ராஜ் தனது நண்பர் அருணை சந்திக்க பெரம்பூர் பகுதிக்கு சென்றார். பின்னர் , தன் வீட்டுக்கு செல்வதற்காக "ரபிடோ பைக்" டாக்ஸியை புக் செய்துள்ளார். வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, பைக்டாக்ஸி ஓட்டுனர் திடீரென்று இருசக்கர வாகனத்தை அயனாவரம் ரயில்வே குடியிருப்பு மைதானம் அருகே நிறுத்தி, கேசவதன்ராஜுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த கேசவதன்ராஜ் கண்டித்து கூச்சலிட்டார். உடனே, பைக் ஓட்டுநர் கேசவாதன்ராஜை தாக்கி அவர் வைத்திருந்த விட்டு, ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக கேசவதன்ராஜ் ஐசிஎப் காவல் நிலையத்தில் ரபிடோ ஓட்டுனர் மீது புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் ரபிடோ பைக் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில், ராஜேஷ்குமார் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதலிக்க வற்புறுத்தி அவரது இருசக்கர வாகனத்தை ராஜேஷ்குமார் எரித்துள்ளார். இது தொடர்பான வழக்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட ராஜேஷ்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரபிடோ ஓட்டுநர்கள் காவல்துறையிடத்தில் நற்சான்றிதழ் பெற்ற பிறகே பணியில் சேர அனுமதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.