காஞ்சிபுரம் அருகே காய்ந்த மரக்கட்டைகள் மீது, கைகளை சுத்தம் செய்யப் பயன்படும் சானிட்டைசரை ஊற்றி, தீக்குச்சியை பற்ற வைத்து விளையாடிய சிறுவர்கள் மீது தீப்பற்றியதில் அவர்கள் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் சாந்தி நகரைச் சேர்ந்த 11 வயதான பிரகாஷ் என்ற சிறுவனும் 7 வயதான முகுந்தன் என்ற சிறுவனும் தங்களது வீட்டின் அருகே காய்ந்துபோன மரக்கட்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
கைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சானிட்டைசர் திரவத்தை எடுத்து வந்து அந்தக் கட்டைகளின் மீது ஊற்றி, தீக்குச்சியை கொண்டு பற்றவைத்தாகக் கூறப்படுகிறது. மரக்கட்டைகளுக்கு மிக அருகாமையில் அமர்ந்தவாறு சிறுவர்கள் பற்றவைத்ததால், சட்டென தீ அவர்கள் இருவர் மீதும் பரவியுள்ளது. அலறித் துடித்த சிறுவர்கள் மீது அருகிலிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர்.
இதில் முகுந்தனுக்கு கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியிலும் பிரகாஷுக்கு தோள் பட்டையிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. 18 விழுக்காடு தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து சானிட்டைசர் பயன்பாடு என்பது கிராமங்கள் வரை விரிவடையத் தொடங்கியுள்ளது. கைகளை சுத்தம் செய்யப் பயன்படும் சானிட்டைசர்களில் ஆல்கஹாலிக் மற்றும் நான் ஆல்கஹாலிக் என இரண்டு வகைகள் உள்ளன.
தண்ணீர் போன்று காணப்படும் ஆல்கஹாலிக் சானிட்டைசர்களில் 75 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை ஐசோ புரபைல் ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவை எளிதில் தீப்பிடித்து, வினாடி நேரத்தில் காற்றில் பரவும் தன்மை கொண்டவை. அதுவே சிறுவர்களின் மீது தீக்காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெல் வடிவத்தில் இருக்கும் நான் ஆல்கஹாலிக் சானிட்டைசர்களில் குறைந்த அளவே ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டிருக்கும். இருப்பினும், இரண்டையுமே குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்து பராமரித்து, பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்..