சிவகங்கை மாவட்டத்தில் ஊர்மக்கள் பயிர்செய்யும் 48 ஏக்கர் நிலத்தின்பேரில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் ஒருவரே பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
குமாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்குச் சொந்தமான 48 ஏக்கர் நிலத்தில் அந்த ஊரைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகச் சரியான விளைச்சல் இல்லாத நிலையில் ஊர்மக்கள் பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரியும் கிடைக்கவில்லை.
வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சடையமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் குமாரமங்கலம் மக்கள் விவசாயம் செய்து வரும் 48 ஏக்கர் நிலத்துக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பெற்று 25 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்குப் பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியருக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் ஊர்மக்கள் புகார் அளித்துள்ளனர்.