தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களிலும், வடகடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.