கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் உள்ள சிவகிரி மலையில் இருந்து தான் பெரியாறு உற்பத்தியாகிறது. காடுகளுக்கிடையே 156 கிலோ மீட்டர் ஓடி வந்த பிறகு முல்லையாறு என்னும் நதியுடன் கலக்கிறது. இரண்டு நதிகளும் இணைந்து சங்கமமான பிறகு முல்லைப்பெரியாறு எனப் பெயர் சூட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு குன்றுகளும் மலைகளும் கடந்து மேற்கு நோக்கி ஓடும் போது குறுகியும், ஆழமான மலையிடுக்கைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த இடம்தான் ஜான் பென்னிகுக்கினுடைய கவனத்தைக் கவர்ந்தது. இந்த பகுதியில் ஓர் அணை கட்டி, மேற்கு நோக்கி ஓடும் நதியின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி கிழக்கு பக்கம் ஓடும் வைகை நதியுடன் இணைக்க வேண்டும் என்பதுதான் பென்னிகுவிக்கின் லட்சியமாக இருந்தது.
அப்படி, நதி திருப்பி விடப்பட்டால், அந்தப் பகுதி மக்கள் செழிப்படைவார்கள் என்பதை பென்னிகுக் கற்பனை செய்து பார்த்தார். இதன் காரணமாகவே, முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட அவர் தீர்க்கமான முடிவெடுத்தார். ஆனால் இங்கேயும் ஒரு பெரிய பிரச்சனை தலை தூக்கியது. அணை கட்டி முடிக்கப்பட்டால் தேங்குகின்ற பெரும் நீர்ப்பரப்பு திருவிதாங்கூரின் எல்லைக்குள்ளும் வந்து சேரும். அந்த தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு திருவிதாங்கூரின் அனுமதி வேண்டியிருந்தது. அதற்கு திருவிதாங்கூர் விசாகம் திருநாள் மகாராஜாவின் அனுமதி பெற சென்னை ராஜதானியை பென்னிகுக் அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். கடந்த 1885- ஆம் ஆண்டு விசாகம் திருநாள் மறைவுக்குப் பிறகு பதவியேற்ற மூலம் திருநாள் மகாராஜாவுடன் சென்னை ராஜதானி அரசு இது குறித்து விவாதித்தது.
அணை கட்டப்பட்டால், தன் நாட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். வெள்ளப்பெருக்கை ஓரளவாவது குறைக்கலாம் என்று மகாராஜாவுக்கு தோன்றியது. எனினும், ஏரியின் தண்ணீரைத்தவிர நிலத்தின் மீது எந்த ஒரு உரிமையையும் கொண்டாடக்கூடாது, அணை கட்டும் செலவு முழுவதையும் சென்னை ராஜதானிதான் ஏற்க வேண்டும். அணைக்கட்டின் பராமரிப்பு, பழுதுபார்த்தல் பணிகளை திருவிதாங்கூரின் மீது சுமத்தக்கூடாது என சென்னை ராஜதானிக்கு மூன்று நிபந்தனைகள் விதித்தார். இதையடுத்து 1885 அக்டோபர் 29 - ம் நாள் 999 ஆண்டுகளுக்கான முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் உருவானது.
திருவிதாங்கூர் மகாராஜா சார்பாக திவான் ராம்ஐயங்காரும், பிரிட்டீஷ் அரசு சார்பில் செக்ரட்டரி ஆப் ஸ்டேட் பார் இந்தியன் கவுன்சில் உறுப்பினர் ஹாமில்டனும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி 8,000 ஏக்கர் பரப்பளவிலுள்ள தண்ணீரை தமிழ் நாட்டுக்கு குத்தகைக்கு கொடுக்கவும், தனியே 100 ஏக்கர் இடம் பணிகளுக்குக் கொடுப்பதற்கு ஒப்பு கொள்ளப்பட்டது. குத்தகைத் தொகையாக ஏக்கருக்கு ஐந்து ரூபாய் தருவதாக சென்னை ராஜதானி ஒப்புக்கொண்டது. நீர்பரப்பின் அடித்தளத்திலிருந்து 155 அடி உயர அணையைக் கட்டுவதற்கும், தண்ணீரை ஒரு குகைப்பாதை வழியாக தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்குமான திட்டம் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டது.
நீண்ட பல்நோக்கு திட்டத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு அணை கட்டப்படுவதால், நீர் எல்லா நேரத்திலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டது. அணையின் மராமத்துப் பணிகள் செய்வதற்கான பொருட்களை எடுத்துச்செல்ல சென்னை மாகாணத்துக்கு முழுமையான உரிமை வழங்குவதுடன் அதற்கு வரி எதுவும் கிடையாது. அணையினுள் அடங்கும் மரம் மற்றும் மரக்கட்டைகளை, அணையின் நலன் கருதி செயல்படுத்தும் திட்டங்களுக்கு சென்னை மாகாண அரசு எந்தவித கட்டணங்களும் கட்டவேண்டியது இல்லை. போக்குவரத்தின் முழு உரிமையும், அணையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உரிமை, அதிகாரம், சுதந்திரம் சென்னை மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 1887- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியாறு அணை கட்டும் வேலைக்கான முதல் கல்லை நட்டார் பென்னிகுக். கடும் போராட்டத்துக்கு பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு 1895 முல்லைப் பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டது. தேனி, மதுரையில் இன்று லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் பெரியாறு அணை கட்டவே, மொத்தம் ரூ. 81.30 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.
மதராஸ் கவர்னர் வென்லாக் பிரபு தலைமையில் 1895, அக்டோபர் மாதம் 10 - ம் நாள் முல்லைப்பெரியாறு அணை அதிகாரப் பூர்வமாக திறக்கப்பட்டது. மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதம் என பெரியாறு அணை குறித்து வென்லாக் பிரபு வியப்பு தெரிவித்தார். பெரியாறு அணை கட்ட அந்த காலகட்டத்தில் 5,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். பெரியாறு அணைக்கட்டு முகாமில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின்படி, 1892 - ம் ஆண்டு 76 பேரும், 1893 - ம் ஆண்டு 98 பேரும் 1894 - ம் ஆண்டு ஆண்டு 145 பேரும், அதற்கடுத்த ஆண்டு 123 பேரும் பணியின் போது இறந்து போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஆங்கிலேய அதிகாரிகள் ஒரு சிலரின் கல்லறை அணைப்பகுதியிலே அமைந்துள்ளது
கேரள அரசின் பொய் பிரசாரம்
நீண்ட பல்நோக்கு திட்டத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளதால், அணை நீரானது எல்லா காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அன்றே இரு மாநிலமும் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தைப் பதிவு செய்துள்ளது. இதைக் கேரள அரசும், அரசியல்வாதிகளும் மறந்து விட்டனர். பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்கான முழு உரிமை பெற்ற தமிழகத்திடமிருந்து உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக கேரளா பறிக்க தொடங்கியுள்ளது. பெரியாறு அணையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இடத்தில் வனச்சட்டத்தை மீறி 1954- ஆம் ஆண்டு கேரள அரசு ஆரண்யநிவாஸ் என்னும் நட்சத்திர ஓட்டலைக் கட்டியது. ஆரம்ப காலத்தில் தேக்கடி ஏரியில் ஒரே ஒரு படகினை மட்டும் இயக்க தமிழக அரசிடம் அனுமதி வாங்கிய கேரள அரசு, 1970- ம் ஆண்டு அணையில் மீன்பிடி உரிமையைக் கேட்டு வாங்கிக் கொண்டது. பிறகு, படகுப் போக்குவரத்தினை முழுமையாக கையகப்படுத்திக் கொண்டது.
முதல் பொய் பிரசாரம்
பெரியாறு அணை தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டு செல்வதற்காக 1979- ம் ஆண்டு பீர்மேடு எம்.எல்.ஏ தாமஸ் மூலம், பெரியாறு அணை பலவீனம் அடைந்துள்ளது, அதன் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என கேரள அரசே மறைமுகமாக போராட்டத்தைத் தூண்டியது. போராட்டம் தொடர்ந்ததால் மத்திய நீர்வள ஆணையம் இந்த பிரச்சனையில் தலையிட்டது. கடந்த 23.11.1979 - ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணைய தலைவர் கே.சி.தாமஸ் தலைமையில் குழுவினர் அணையை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பிறகு, ரூ. 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழைய அணையை ஒட்டி புதிய சப்போர்ட் அணை ஒன்றை மூன்று கட்ட பணியுடன் செய்து முடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பணி முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைப்பது, பணிகள் அனைத்தும் முடிந்தபின் நீர்மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் எனவும் 25.11.79- ம் ஆண்டு தமிழக, கேரள அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பணிகள் முடிந்த பின்னும் கேரளா அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முரண்டு பிடித்தது. இதனால் தமிழகம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு:
பெரியாறு அணைப் பகுதியில் உச்சநீதிமன்றம் நியமித்த உயர்நிலைக்குழுவினர் உத்தரவின் பேரில் பல்வேறுகட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. 8 நிபுணர் குழு மூலம் 13 கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய பெஞ்ச் கடந்த 2014 - ம் ஆண்டு மே 7 ஆம் தேதி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. மேலும் அணையை கண்காணித்து நீர்மட்டத்தை உயர்த்த மூவர் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது.
மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.
இதில் தமிழக பிரதிநிதியாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், கேரள பிரதிநிதியாக அம்மாநில நீர்பாசனத்துறை கூடுதல் செயலாளர் குரியன் நியமிக்கப்பட்டனர்.
இந்த கண்காணிப்பு குழுவினரின் 2014 - ஆம் ஆண்டு ஜூலை 17- ந் தேதி பெரியாறு அணையை பார்வையிட்டனர். பின்னர் தமிழக பிரதிநிதி சாய்குமார் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 தண்ணீர் தேக்கும் விதமாக பெரியாறு அணையின் மதகுகளை இறக்க உத்தரவிட்டார்.
இதனால் 35 ஆண்டுகளுக்குப்பின் 2014- ஆம் ஆண்டு நவம்பர் 21 - ந் தேதி பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.
கண்காணிப்பு குழுவின் தீர்மானங்கள்
அதைத்தொடர்ந்து கண்காணிப்பு குழு கூட்டங்களில், பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் உயர்த்த பேபி அணையை பலப்படுத்துதல், வல்லக்கடவு வழியாக பெரியாறு அணைக்குச் செல்லும் பாதையை சீரமைப்பது, பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வது, மெயின் அணையிலிருந்து பேபிடேம் செல்லும் இடைப்பட்ட பகுதியில் காங்கரீட் தளம் அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகப் பிரதிநிதிகள் வலியுறுத்துவார்களா?
கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், தமிழக அரசும், அதிகாரிகளும் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீவிரமாக எடுக்காமல் போனதால் அந்த தீர்மானங்கள் அப்படியே நின்று போயின. தீர்மானத்தில் நிறைவேற்றிய பணிகள் ஒன்று கூட இன்று வரை நடைபெறவில்லை. இதனால் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவது என்பது நீர்த்துப் போக வாய்ப்புள்ளது. எனவே அடுத்து வரும் கண்காணிப்பு குழு ஆலோசனைக் கூட்டத்திலாவது, முந்தைய கூட்டங்களில் போடப்பட்ட தீர்மானங்களின் படி பெரியாறு அணையில் பணிகள் செய்ய தமிழக பிரதிநிதியும், தமிழக அதிகாரிகளும் வலியுறுத்த வேண்டும்.
அப்போது தான் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கி வைக்கும் தமிழகத்தின் கனவு நனவாகும்!