மருத்துவ மேற்படிப்பில் காலியாக இருந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் காலியாக இருந்த 74 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் தனியார் கல்லூரிகளுக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் சுட்டிக்காட்டினார். அந்த இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பணம் வாங்கிக் கொண்டு சேர்ப்பதாக கூறிய நீதிபதி, அதனால் சமுதாயத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான இந்த சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?, கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு? உள்ளிட்டவற்றை விசாரிக்க உதவி கமிஷனர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக டி.ஜி.பி., நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.