தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, பூக்கள், பழங்கள், பொரி, அவல் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
சென்னை:
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறு வியாபாரிகள் வரத்து அதிகளவில் இல்லாததால், ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. பூசணிக்காய், வாழைக்கன்று, கரும்பு மற்றும் மாவிலைத் தோரணம் ஆகியவை கோயம்பேடு சந்தைக்கு நேற்றே கொண்டு வரப்பட்டன.
ஆனால், சந்தைக்குள் சிறு வியாபாரிகள் விற்பனை செய்யவும், பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், விற்பனை குறைவாகவே காணப்பட்டது.மக்களிடம் போதுமான பணப் புழக்கம் இல்லாததாலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாலும் சிறு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை திருவொற்றியூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு கடை வீதிகளில் ஏராளமானோர் குவிந்த போதும், வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக சாலையோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றால், பெரும்பாலானோர் ஆயுத பூஜையை எளிமையாகக் கொண்டாடுவதால், வழக்கத்தை விட குறைவாகவே பூஜை பொருட்களை வாங்கி செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மதுரவாயல் பூ மார்க்கெட்டில், பூக்கள் விலை 4 மடங்கு உயர்ந்து விற்பனையானது. 100 ரூபாய்க்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ரோஜாப்பூ தற்போது 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லைப் பூ, மல்லிகை ஆகியவை கிலோ 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி, வணிக வளாகங்கள், கடைகள் மிகுந்து காணப்படும் சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விற்பனையும் வழக்கம்போலவே அதிகரித்து காணப்பட்டது. ஒரு சிலர் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டனர். கூடுதலாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை:
மதுரையில் ஆயுத பூஜையை ஒட்டி, பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வாழை இலை, பொரி, கடலை, கொய்யாப்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பழங்கள், வாழைக்கன்று ஆகியவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாழை மரங்கள் 50ரூபாய்க்கும், வாழை இலை 10 இலைகள் கொண்ட அடுக்கு 50ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நகரின் முக்கிய இடங்களில் தற்காலிகமாக கடை அமைக்கப்பட்டும் விற்பனை நடைபெற்றது.
நெல்லை:
நெல்லையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி, சந்தைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வாழை இலை, பூக்கள், அவல் பொரி, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர். பூக்கள் மற்றும் வாழை இலை உள்ளிட்ட பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மார்க்கெட் பகுதிகளில் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருச்சி:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் விற்பனை வழக்கத்தை விட சற்று மந்தமாகவே காணப்பட்டது. இருப்பினும், பழங்கள், பூக்கள் விலை சற்று அதிகரித்தே காணப்பட்டது.
கோவை:
கோவையில் பூக்கள், பழங்கள், அச்சுவெல்லம், பொரி, அவல், வாழைஇலை, வாழைக்கன்று உள்ளிட்டவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. தேவாங்க பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மலர் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூக்கள் விலை 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்ந்தது. இதேபோல பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி, பூக்கள் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், விலையும் 5 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 250 டன் பூக்கள் விற்பனையாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்புவரை, 350 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ, 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிச்சி பூ கிலோ 1000 ரூபாய்க்கும், சம்பங்கி 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் வரத்து அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று, வேலூர் மாவட்டம் குடியாத்தாம் மலர் சந்தையிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளன.