வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் வளர்ந்த 2 சந்தனமரங்கள் மர்ம நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி அலுவலகத்திலேயே கைவரிசையைக் காட்டியுள்ள மர்ம நபர்களால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், தொரப்பாடி அண்ணாசாலையில் அமைந்துள்ளது வேலூர் சரக டிஐஜி அலுவலகம். டி.ஐ.ஜி வளாகத்தில் சுமார் 8 ஆண்டுகள் வயதான சந்தன மரம் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றிரவு அடையாள தெரியாத நபர்கள் 2 சந்தன மரங்களையும் வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர். வெட்டப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு இரண்டு லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்ற சந்தன மரத்தின் வேர்ப் பகுதியை வனத்துறையினர் மதிப்பீட்டுக்காகத் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதர சந்தன மரத் துண்டுகள் அரசு கிடங்குக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில்தான் டி.ஐ.ஜி அலுவலகம், டி,எஸ்.பி, அலுவலகம், சுற்றுலா மாளிகை, கலெக்டர் மற்றும் நீதிபதி பங்களா என்று முக்கிய அரசு அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. காவல் மிகுந்த டி.ஐ.ஜி அலுவலக வளாகத்தின் நுழைவாயிலிலிருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தன மரத்தை வெட்டிச்சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடிவருகின்றன.