மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
யூடியூப் சேனல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினரும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.இதில் திருமாவளவன் மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக சுட்டிக்காட்டி கருத்துக்களை பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பொய்யான தகவல்களை கூறி, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக திருமாவளவன் மீது புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
295 ஏ -வேண்டுமென்றே மத உணர்வுகளுக்கு தீங்கிழைக்கும் வகையில் மதங்கள்,மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல்
298-வார்த்தைகளால் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பேசுதல்
505 1 - குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்தி,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வதந்தி அல்லது அறிக்கை வெளியிடுதல்
505 - 2 - அறிக்கை வெளியிட்டு இருபிரிவினருக்கு இடையே மோதல்,வெறுப்பை ஏற்படுத்துதல்
153- ஆத்திரமூட்டி, கலவரத்தை ஏற்படுத்துதல்
153 ஏ - இருபிரிவினருக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுதல்
இந்த பிரிவுகிளின் கீழ் திருமாவளவன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருமாவளவன் வீடியோவை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். நாளை மனுதர்ம நூலை தடைசெய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் , மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.