மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவினர், தங்கள் பரிந்துரைகளை தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அக்கடிதத்தில், மும்மொழி கொள்கை தமிழ்நாட்டுக்கு ஏற்புடையது அல்ல, பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தமிழ்நாட்டுக்கு சாத்தியம் அல்ல, கல்லூரிகள் பல்கலைக்கழகத்துடன் இணைப்பில் இருப்பது அவசியம் ஆகும், கல்லூரிகள் தாங்களாகவே பட்டங்களை வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது, மாநில அரசுக்கு கல்வியில் அதிக சுயாட்சி வழங்க வேண்டும் என்ற 5 அம்சங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவிட்டது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பழகன் நேற்று ஆலோசனை நடத்தியபோது, தமிழக அரசின் கடிதம் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதால் UGC-இன் உத்தரவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசிடம் இருந்து பதில் கடிதம் வந்த உடன் முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.