கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார்.
தொழில் முதலீடு ஈர்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவிப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, விராலிமலையில், சீறிவரும் காளையை வீரர் அடக்க முயல்வது போன்ற சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதனையடுத்து, கவிநாடு பகுதியில் 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடந்து முடிந்த குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வரும் ஜனவரி மாதம் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்றார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு நன்மையே விளையும் என முதலமைச்சர் கூறினார்.