தமிழகத்தில் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிக வளாகங்களையும் திறக்க அளிக்கப்பட்ட அனுமதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 9 மணி வரை மட்டும் கடைகள், வணிக வளாகங்களை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதித்திருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் பண்டிகைக் காலம், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுப்பது, நோய் தொற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிகவளாகங்களையும் திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்த மற்ற பகுதிகளில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இரவு 10 மணி வரை இயங்கலாம்.
கடைகள் மற்றும் பொது இடங்களில் கூட்டம் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது, குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பது, அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.