கோவையில் திருநங்கைகள் நல் வாழ்வுக்காக போராடி வந்த திருநங்கை சங்கீதா கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலணி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா( வயது 60). திருநங்கைகள் நல் வாழ்வுக்காக தனி அமைப்பு தொடங்கி அவர்களின் மேம்பாட்டுக்காக சங்கீதா பாடுபட்டு வந்தார். திருநங்கைகளுக்கு சாலையோர கடைகள் நடத்த உதவி புரிவது, படிப்புக்கு உதவுவது என பல்வேறு நலப்பணிகளை செய்து வந்த சங்கீதா, சமீபத்தில் வடகோவை பகுதியில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவு விடுதியை தொடங்கி நடத்தி வந்தார். இந்த உணவகத்தில் முற்றிலும் திருநங்கைகளே பணி புரிந்து வந்தனர். இங்கு தாயாரிக்கப்படும் உணவு வவைகள் கோவை மக்களிடத்தில் வெகு பிரபலம்.
இந்த நிலையில், சாயிபாபா காலனி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையின் அருகே டிரம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக சாயிபாபா கோயில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் வந்து டிரம்மை திறந்து பார்த்த போது, உள்ளே சங்கீதா சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்து. தொடர்ந்து அந்த பகுதிக்கு மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
முதல் கட்ட விசாரணையில் சங்கீதா கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. வடகோவையில் இயங்கி வந்த டிரான்ஸ் கிச்சன் உணவகத்தில் இரண்டு இளைஞர்களும் பணி புரிந்து வந்துள்ளனர். இந்த இளைஞர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க துணை கமிஷனர் பிரேமானந்த் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
திருநங்கை சங்கீதாவின் கொலை மூன்றாம் பாலினத்தவர் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான திருநங்கைகள் கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர்.