உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து வாகனங்களும் கட்டணம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள மிக முக்கியமான சுங்கச்சாவடி இது. இந்த சுங்கச்சாவடியில் 250- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இதேபோல், கடலூர் மாவட்டம் திருமாந்துறை பகுதியிலும் ஒரு சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த இரண்டு சுங்கச்சாவடிகளையும் டிடிபிஎல் என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இரண்டு சுங்கச்சாவடிகளிலும் சேர்த்து 500- க்கும் மேற்பட்டவர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில், சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
விபத்தில் இறந்த ரமேஷின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டும், தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டும் நேற்று முதல் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி புரியும் ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் நேற்று மாலையில் இரண்டாவது நாளாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால், சென்னை திருச்சி நான்கு வழிச் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டணமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன.