கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தன் திருமணத்துக்காக, ரஜினி புகைப்படத்துடன் இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை என்ற வாசகத்துடன் கூடிய அழைப்பிதழை அச்சிட்டு வழங்கி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக பல ஆண்டுகளாகக் கூறி வருகிறார். ரசிகர்களும் ஆதரவாளர்களும் ரஜினி எப்போது கட்சியைத் தொடங்குவார் என்று ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர் .
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் தன் திருமணத்துக்காக, ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் அழைப்பிதழ் அச்சடித்துள்ளார். அதில், “இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை... நாமின்றி வேறுயாருமில்ல" போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது, இந்த அழைப்பிதழை ரஜினி ரசிகர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது குறித்து ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், ரஜினி ரசிகர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், அரசியல் வசனங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த திருமண அழைப்பிதழ் ரசிகர்கள் மத்தியில் சற்று உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தொடங்கும் அறிவிப்பை ரஜினிகாந்த் விரைவில் வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இது போன்ற வித்தியாசமான முறையில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது...