ஸ்விகி, ஜொமாட்டோ, அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் போர்வையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதால், டெலிவரி ஊழியர்களை பணியமர்த்தும் போது காவல்துறை நன்னடத்தை சான்றிதழ் அவசியம் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 68 என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை திருடிய கும்பல் சமீபத்தில் சிக்கியது. இந்த கும்பலில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் ஜொமாட்டோ நிறுவனத்தின் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் உடை அணிந்து கொண்டு போலீசாருக்கு சந்தேகம் வராமல் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதே போல, ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி ஊழியர்கள் போன்று உடை அணிந்து கொண்டு வழிப்பறி, செயின் பறிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். உணவு கொண்டு செல்வது போல் போதை பொருட்களை கடத்திச் சென்ற ஸ்விகி, ஜொமாட்டோ உடை அணிந்தவர்களும் சிக்கியுள்ளனர்.
கைதானவர்களில் பலர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்களாகவும், சிலர் முன்னால் ஊழியர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களைக் கண்காணிக்க சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இது போன்ற நிறுவனங்களில் டெலிவரி ஊழியர்களை பணியமர்த்தும் முன்பு காவல் துறையிலிருந்து நன்டைத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், குற்றப் பின்னனியை ஆராய வேண்டும் என்று சென்னை நகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். காவல் துறையின் இணைய சேவையான CCTNS மூலம் நன்டைத்தை சான்றுகளைப் பெறலாம் எனவும் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்...