ஏ.டி.எம்- மில் பணம் வராததால், இயந்திரத்தை அடித்து உதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் சாலையில் ஸ்டேட் பேங்க் ஏ.டி. எம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏ.டிஎம் மையம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பணமும் நிரப்பப்படுவதில்லை . எப்போதாவது ஒரு முறைதான் பணம் நிரப்பி வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனால், இங்கு பணம் எடுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது தொடர் கதையாக இருந்து வந்துள்ளது .
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒருவர் இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்துள்ளார். இயந்திரமோ... வழக்கம் போல பணம் தர முடியாத நிலையில் இருப்பதாக பதிலளித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் ஏ.டி.எம் இயந்திரத்தை சராமரியாக அடித்து தாக்கியுள்ளார்.
இந்த ஏ.டி.எம் மையத்தில் சிசிடிவி கேமராவை ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை. இதனால், ஏ.டி.எம் இயந்திரம் மீது தாக்குதல் நடத்திய நபரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது, ஏ.டி.எம். இயந்திரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.